கோவை அருகே, ரூ.3 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற பெற்றோர் கைது
கோவை அருகே ரூ.3 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி,
கோவையை அடுத்த மதுக்கரையை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். ஆட்டோ டிரைவர். மதுக்கரை கிளை தி.மு.க. தொழிற்சங்க துணை செயலாளர் ஆவார். இவர் கடந்த 17-ந் தேதி குழந்தையை விற்பனை செய்யும் புரோக்கர்களான ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஹசீனா, கல்யாணி மூலம் ஆண் குழந்தையை விலைக்கு வாங்க எண்ணி கருமத்தம்பட்டிக்கு வந்துள்ளார்.
அங்கு ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகீர் உசேன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, பிறந்து 40 நாட்கள் ஆன ஆண் குழந்தையை மதுரையை சேர்ந்த கண்ணன்-கோமதி தம்பதியிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்க விலை பேசினர். பின்னர் அவர்கள் அனைவரும் காரில் சூலூர் வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஹசீனா, குழந்தையின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேரும் ரூ.3 லட்சம் கொடுத்தால் குழந்தையை விற்பதாக ஜாகீர் உசேனிடம் கூறியுள்ளனர். அப்போது ஜாகீர் உசேன் தன்னிடம் ரூ.2 லட்சம் தான் உள்ளது. இதை பெற்றுக்கொண்டு குழந்தையை தரும்படியும், மீதி தொகையை விரைவில் தருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் குழந்தையை விற்றனர்.
இதையடுத்து ஜாகீர் உசேன் கமிஷன் கேட்டார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கோவை பாப்பம்பட்டி அருகே ரோட்டோரம் கமிஷன் மற்றும் பணத்தை பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து வந்து அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் ஹசீனா மீது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கு இருப்பதும், அந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளதும் தெரியவந்தது. இதை யடுத்து ஈரோட்டை சேர்ந்த ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகீர் உசேன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
குழந்தையின் பெற்றோரான கண்ணன், கோமதி ஆகியோரிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்த தம்பதியினர் ஏற்கனவே பிறந்த முதல் குழந்தையையும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை தப்பி செல்ல முயன்ற கண்ணன்-கோமதி ஆகிய 2 பேரையும் நேற்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை குழந்தைகள் நலக்குழு மற்றும் குழந்தை நேய நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் அந்த ஆண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோரே கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story