தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமல்: ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது - கலெக்டர் கதிரவன் தகவல்
தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி தேர்தல் நன்னடத்தை விதிகள் ஊரக பகுதிகளில் அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் பொருட்டு 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும்படையினர் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையும் என சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
நன்னடத்தை விதிமுறையின்படி வேட்பாளர்களோ, அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளோ, அரசியல் கட்சியினரோ உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை எடுத்து செல்லக்கூடாது. மேலும், தேர்தல் பொருட்கள், போஸ்டர்கள், போதை பொருட்கள், மதுபானங்கள், ஆயுதங்கள், ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.
பறக்கும் படையினரின் சோதனை, பறிமுதல் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் வீடியோ எடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் தொகை கோர்ட்டு வழிகாட்டுதலின்படி கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் பணியமர்த்தப்பட்டு உள்ள அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள தவறியவர்கள் 2-வது, 3-வது கட்ட பயிற்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். பயிற்சிகளில் கலந்துகொள்ளாத அதிகாரிகள், பணியாளர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஇருந்தார்.
Related Tags :
Next Story