குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும். தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தலைவர் கன.குறிஞ்சி தலைமை தாங்கினார். ஈரோடை அமைப்பின் தலைவர் நிலவன் முன்னிலை வகித்தார்.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டமானது இந்தியாவில் பிறந்த குழந்தைக்கும் கூட குடியுரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சட்டத்தை அரசு திரும்பப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
எனினும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி, அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற முறையில் மக்கள் சக்தியை திரட்டி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த உணர்வை எல்லோரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
இந்த சட்டம் முஸ்லிம்கள் அல்லது தமிழர்களை மட்டும் பாதிக்கும் என்பது இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கும். எனவே இந்த சட்டம் ஒட்டுமொத்தமாக தூக்கி எறியப்பட வேண்டிய சட்டம்.
இவ்வாறு ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, த.மு.மு.க., மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story