பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு தேனீ, காடை வளர்ப்பு பயிற்சி - டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு தேனீ, காடை வளர்ப்பு பயிற்சி - டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Dec 2019 10:00 PM GMT (Updated: 19 Dec 2019 6:59 PM GMT)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு தேனீ, காடை வளர்ப்பு பயிற்சியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில், அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் பணிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு தேனீ மற்றும் காடை வளர்ப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயிற்சியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறைக்கைதிகள் நல்வாழ்வுக்கு திரும்பும் வகையிலும், அவர்கள் சிறையில் மனஅழுத்தம் இன்றி அமைதியாக இருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் 4 தோட்டங்கள் உள்ளன. இங்கு கைதிகளுக்கு தோட்டக்கலை பணி வழங்கப்படுகிறது. அவர்கள் மூலம் காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்து, சிறை வாசலில் அமைந்துள்ள சிறை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இனிப்பு, கார வகைகள் மற்றும் பிராய்லர் கோழி உற்பத்தி செய்து விற்கப்படுகிறது. இதுதவிர ஹாலோபிளாக் செங்கல் உற்பத்தி செய்து அரசு கட்டிடங்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது புதிய முயற்சியாக சிறை வளாகத்தில் தேனீ மற்றும் காடைகள் வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக தேனீ வளர்ப்பு நிபுணர்கள் மூலம் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 100 காடை குஞ்சுகள் வாங்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் தேன் மற்றும் பெரிய காடைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

சிறை நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆவின் பாலகமும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறை வளாகத்தில் இந்த ஆண்டு 1 ஏக்கரில் நெல் நாற்று நடவு செய்து நெல் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு கிரு‌‌ஷ்ணகுமார், ஜெயிலர் பரசுராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. பழனி சிறை வளாகத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளின் அறைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Next Story