திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் வி‌‌ஷம் குடித்த புதுப்பெண் சாவு


திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் வி‌‌ஷம் குடித்த புதுப்பெண் சாவு
x
தினத்தந்தி 20 Dec 2019 4:45 AM IST (Updated: 20 Dec 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு, காதலனுடன் வி‌‌ஷம் குடித்த புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டூர் காலபெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் ரஞ்சிதா (வயது 19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சாத்தூர் அருகே உள்ள பிறவிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மனோஜ் பாண்டியன் (19). இவர் சாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு ரஞ்சிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 13-ந் தேதி ரஞ்சிதாவை உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் ரஞ்சிதா தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்தார்.

கடந்த 16-ந் தேதி கணவரை உதறி விட்டு, வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா தன்னுடைய காதலனான மனோஜ் பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலை அடிவாரத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் 2 பேரும் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று, அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ரஞ்சிதாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், மனோஜ் பாண்டியனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜ் பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 நாட்களில் கணவரை உதறி விட்டு காதலனுடன் வி‌‌ஷம் குடித்த புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story