குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியலுக்கு முயற்சி;36 பேர் கைது


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியலுக்கு முயற்சி;36 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர். இதைபோல மத்திய பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கல்லூரி மாணவர்கள் மறியல், உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதையும் மீறி போராட்டம் நடத்தப்படும் என்ற தகவலால் ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டனர்.

36 பேர் கைது

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் மெயின் நுழைவு வாயில் முன்பிருந்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் ரெயில் நிலையம் நோக்கி அந்த அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். கையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பியபடி வந்தனர். ரெயில் நிலைய வளாகத்தில் அவர்களை போலீசார் மேலும் முன்னேற விடாமல் தடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 36 பேரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தின்போது மாவட்ட அமைப்பாளர் மோகன்குமார் கூறுகையில்,‘குடியுரிமை திருத்த சட்டம் முழுக்க முழுக்க இந்திய மக்களை பிளவுப்படுத்தக்கூடியது. அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இருக்கக்கூடிய இந்திய நாட்டில் இனரீதியாக பிளவுப்படுத்தும் சதி. இதனை ஒருபோதும் எங்கள் அமைப்பு அனுமதிக்காது. இஸ்லாமியர்களை பயமுறுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்யும் வரை தொடர்ச்சியாக எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பு

இதேபோல, திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று காலை 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடத்திட ஊர்வலமாக வந்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக செயலாளர் ஜீவா, பாடகர் கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தமிழாழன், புல்லட் லாரன்ஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி புதியன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பின்னர் மத்திய பஸ் நிலையத்தின் தஞ்சாவூர் வழித்தட மார்க்கத்தில் கோ‌‌ஷம் எழுப்பியவாறு மறியல் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை நிராகரிப்போம் என்றும், டெல்லி மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், பாரதீய ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.-ன் பாசிசத்திற்கு எதிராக போராட்டத்தீ பரவட்டும் என்றும் கோ‌‌ஷம் எழுப்பப்பட்டன. போராட்ட முடிவில் 10 பெண்கள் உள்பட 38 பேரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.


Next Story