திண்டுக்கல் அருகே, பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு 12 கிராம மக்கள் போராட்டம்


திண்டுக்கல் அருகே, பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு 12 கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:15 AM IST (Updated: 20 Dec 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு 12 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மழை பெய்தால், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கூழையாறு, பெரியாற்று உருவாகிறது. இங்கிருந்து வரும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லும். இதில் பெரியாற்றில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர், ஆத்தூர் அணைக்கட்டு, புல்லுவெட்டி கண்மாய் வழியாக குடகனாற்றுக்கு வந்து அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், வக்கம்பட்டி, சூசைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்களுக்கு செல்கிறது.

இதேபோல் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரும் அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குளங்களுக்கு வருகிறது. இதன் மூலம் அந்த கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியாற்று பகுதியில், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் அருகே ஏற்கனவே 1 அடி உயரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மேலும் 3 அடிக்கு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக குடகனாற்றுக்கு கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதனால் அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்தும், பாசனத்துக்கு தண்ணீர் கேட்டும் அனுமந்தராயன்கோட்டை பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அப்பகுதி மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவாக மயிலாப்பூர், வக்கம்பட்டி, சூசைபட்டி, மேலப்பட்டி, கும்மம்பட்டி, ஆத்தூர், சுரைக்காய்பட்டி, தாமரைக்குளம், வண்ணம்பட்டி உள்பட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் அனுமந்தராயன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக்கொடிகளை ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

இதற்கிடையே பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் அருகே கட்டப்பட்ட தடுப்புச்சுவரின் உயரத்தை 1 அடியாக குறைக்க வேண்டும்.

நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தி குடகனாற்றுக்கு தண்ணீர்வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலை அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் புறக்கணிப்போம். யாருக்கும் வாக்களிக்க மாட்டோம். மேலும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தையும் கைவிடமாட்டோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story