குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கடலூரில், கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கடலூரில், கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:15 AM IST (Updated: 20 Dec 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில், கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன்படி கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதேபோல் கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் அனைத்துத்துறை மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அனைவரும் திரண்டு, கல்லூரி நுழைவு வாயில் அருகில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பது போன்ற பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌‌ஷமிட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்துக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story