சேலத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு சிம்கார்டுகளை வழங்கிய 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை


சேலத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு சிம்கார்டுகளை வழங்கிய 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 20 Dec 2019 4:45 AM IST (Updated: 20 Dec 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தை சேர்ந்த ஐ.எஸ்.பயங்கரவாதிக்கு சிம்கார்டுகளை வழங்கிய 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் லியாகத்அலி. இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அம்மாபேட்டையில் உள்ள லியாகத் அலியின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் இருந்த பல சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது லியாகத் அலி குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறினர். மேலும் லியாகத் அலியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வந்தனர். இதனிடையே லியாகத் அலி கேரளாவில் பதுங்கி இருந்து, அங்குள்ள இளைஞர்களை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து வருவது தெரியவந்தது.

உளவுத்துறை

இந்த நிலையில் லியாகத் அலியுடன் இருந்த 4 பயங்கரவாதிகள் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையொட்டி அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கேரளாவில் பதுங்கி இருந்த லியாகத் அலியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லியாகத் அலி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டுகள், சேலத்தில் உள்ள சில கடைகளில் போலி முகவரி கொடுத்து வாங்கி இருப்பதும், அவைகள் பயங்கரவாதிகளுக்கு கொடுக்கப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

தீவிர சோதனை

இந்த சிம்கார்டு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலி முகவரி கொடுத்து சேலத்தில் உள்ள சில கடைகளில் 10 சிம்கார்டுகள் வாங்கி அதை லியாகத் அலிக்கு கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள 4 பயங்கரவாதிகளின் உருவப்படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, சேலம் ரெயில் நிலையத்தில், பயணிகளிடம் காண்பித்து, அவர்கள் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு போலீசார் அறிவித்து வருகின்றனர். மேலும் சேலம் வழியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story