ஊத்துக்கோட்டை அருகே, விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது
ஊத்துக்கோட்டை அருகே விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகய்யா(வயது 54). ஊத்துக்கோட்டை அருகே உள்ள செஞ்சிஅகரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். சீனிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரரெட்டி(53). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க மின்சார வாரியத்தில் இணைப்பு பெற சிட்டா நகல் வழங்குமாறு முருகய்யாவை அணுகினார்.
சிட்டா அடங்கல் வழங்க ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முருகய்யா கேட்டார். “அவ்வளவு தொகை என்னிடம் இல்லை” என்று கருணாகரரெட்டி கூறியபோதும், “ஒரு பைசா குறைந்தாலும் சிட்டா அடங்கல் வழங்க முடியாது” என்று முருகய்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் வெறுத்துப்போன கருணாகரரெட்டி, இது குறித்து தனது மகன் விவேக்(31) உடன் சேர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், சுமித்திரா ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று இரவு விவேக் ரூ.20 ஆயிரத்துடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையபகுதிக்கு சென்றார்.
இதையடுத்து முருகய்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட கருணாகரரெட்டி, “பனப்பாக்கம் பெட்ரோல் நிலைய பகுதிக்கு வாருங்கள். அங்கு எனது மகன் உங்களிடம் பணம் கொடுப்பான்” எனக்கூறினார்.
அதன்பேரில் அங்கு வந்த முருகய்யாவிடம், விவேக் ரூ.20 ஆயிரம் வழங்கினார். அப்போது ஏற்கனவே அங்கு வந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முருகய்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story