வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை ‘திடீர்’ உயர்வு - காய்கறி விலைகள் சற்று குறைவு


வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை ‘திடீர்’ உயர்வு - காய்கறி விலைகள் சற்று குறைவு
x
தினத்தந்தி 19 Dec 2019 10:15 PM GMT (Updated: 19 Dec 2019 9:02 PM GMT)

வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து வரத்து குறைவால் உருளைக்கிழங்கு விலை உயர்ந்து வருகிறது. அதேசமயம் விற்பனை மந்தத்தால் காய்கறி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்த காரணத்தினால் மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பல்லாரி வெங்காயம் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது. ஒரு கிலோ ரூ.200 வரை சில்லரை கடைகளில் விற்பனை ஆனது.

அதன்பின்னர், ஓரளவு வெங்காயம் வரத்தொடங்கியதும் விலை குறைந்தது. நேற்றுமுன்தினம் மீண்டும் விலை அதிகரித்து, ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ரகமான கர்நாடகா ரூ.110-க்கும், ஆந்திரா ரூ.90-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று அதன் விலை குறைந்து காணப்பட்டது. கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்து, நாசிக் வெங்காயம் ரூ.120-க்கும், கர்நாடகா ரூ.90-க்கும், ஆந்திரா ரூ.70 முதல் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், மற்ற காய்கறி விலையும் நேற்று குறைந்து இருந்தது. பீன்ஸ், கேரட், பீட்ரூட், நூக்கல், சவ்சவ், கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய், இஞ்சி, மிளகாய் உள்பட சில காய்கறி விலை நேற்று முன்தினத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரையில் குறைந்துள்ளது.

வரத்து குறைவாக இருந்தாலும், விற்பனை மந்தமாக இருப்பதால் காய்கறி மற்றும் வெங்காயம் விலை சரிந்து இருப்பதாக சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வெங்காயம் விலை உயர்ந்த சமயத்தில் முருங்கைக்காயும் வரத்து தமிழகத்தில் அறவே இல்லாததால், அதன் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருந்தது. தற்போது மேலும் அதன் விலை அதிகரித்து நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.380 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெங்காயம் உள்பட சில காய்கறி விலை குறைந்து இருந்தாலும், உருளைக்கிழங்கு விலை திடீரென்று உயர தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக அதன் விலை எகிறி வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆனது. அதுவே சில்லரை கடைகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து நாள் ஒன்றுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 லாரிகளில் வந்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு, தற்போது வரத்து குறைவால் 15 லாரிகளில் தான் வருகிறது என்றும், அதன் காரணமாகவே விலை உயர்ந்து இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story