கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை; காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
போராட்டத்தை தடுக்கவே தடை உத்தரவு அமல். கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு 3 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக வரலாற்றில் இதுவரை இவ்வாறு முடிவு எடுத்தது இல்லை. போராட்டத்தை தடுக்கவே இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது. மாநில அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது. தனிமனித சுதந்திரம் முடக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மகதாயி நதி நீர் பிரச்சினையில் கலசா-பண்டூரி திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இப்போது அந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எடியூரப்பா கூறினார்.
இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். பெங்களூரு டவுன் ஹாலில் போராட்டம் நடத்திய ராமச்சந்திர குஹாவை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களை போலீசார் தள்ளிவிட்டு உள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா நேரடியாக மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். போராட்டம் நடத்தும் மக்களை மிரட்டுவது முட்டாள்தனம். ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல. இதை எடியூரப்பா புரிந்து செயல்பட வேண்டும்.
இந்திரா உணவகத்தை மூட வேண்டும் என்று மந்திரி சி.டி.ரவி கூறியுள்ளார். ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்துவது சரியா?. அந்த உணவகத்திற்கு மகரிஷி வால்மீகி பெயரை சூட்ட வேண்டும் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நான் அதே வால்மீகி சமுதாயத்தை சேர்ந்தவன். வால்மீகி சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அந்த மக்கள் கேட்டு வருகிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டை வழங்கினால், அந்த சமுதாய மக்களுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும். இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகருமான கே.பி.கோலிவாட் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி, அமித்ஷா இருக்கும் வரை ஜனநாயகம் இருக்காது. குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் என்ன?. முஸ்லிம்களை சட்டத்தில் சேர்க்க மாட்டோம் என்று சொன்னால், அவர்களை எங்கே அனுப்புவது?. இந்த நாட்டில் அனைவரும் சமமாக வாழும் உரிமை உள்ளது. போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னால் எப்படி?“ என்றார்.
Related Tags :
Next Story