மங்களூரு வன்முறைக்கு காங்கிரசே நேரடி காரணம்; பா.ஜனதா குற்றச்சாட்டு


மங்களூரு வன்முறைக்கு காங்கிரசே நேரடி காரணம்; பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Dec 2019 4:45 AM IST (Updated: 20 Dec 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு வன்முறை சம்பவத்திற்கு காங்கிரசே நேரடி காரணம் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா பொதுச்செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் தொல்லையை அனுபவித்த சிறுபான்மையின அதாவது இந்துக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் வந்து குடியேறினர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது குடியுரிமை வழங்கும் சட்டம். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் நோக்கம் இதில் இல்லை.

இந்த சமுதாயங்களை தவிர்த்து வெளிநாடுகளை சேர்ந்தவர்களும், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க ஏற்கனவே உள்ள சட்டங்களில் அவகாசம் உள்ளது. இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன் என்பது தெரியவில்லை. வன்முறையை அக்கட்சி தூண்டிவிடுகிறது. இதுதான் அக்கட்சியின் நோக்கமாக உள்ளது. மங்களூருவில் நேற்று வன்முறை நடந்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் தான் நேரடி காரணம்.

காங்கிரஸ் தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக இதை எதிர்க்கிறார்கள். வன்முறையை தூண்டிவிடும் காங்கிரஸ் மற்றும் பிற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.

Next Story