போராட்டத்தை தடுக்க தடை உத்தரவு பிறப்பிப்பதா? கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம்


போராட்டத்தை தடுக்க தடை உத்தரவு பிறப்பிப்பதா? கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம்
x
தினத்தந்தி 20 Dec 2019 5:00 AM IST (Updated: 20 Dec 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தை தடுக்க தடை உத்தரவு பிறப்பிப்பதா? என்று கூறி கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எனது தலைமையில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, நீங்கள் (எடியூரப்பா) எத்தனை போராட்டங்களை நடத்தினீர்கள் என்பதை சற்று சரியாக நினைத்து பாருங்கள். உங்களின் செயல்பாடு, ஈடுபாடு என்ன என்பதில் தெளிவு இல்லை. ஆனால் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற உங்களை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அவர்களின் வலையில் விழுகிறீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். பாசிசத்திற்கு எதிராக போராடும் அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடுபவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.

இதுபோன்ற போராட்டங்கள் தான் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. அரசியல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களே போராட்டம் நடத்துவார்களே. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள். அப்போது 144 தடை உத்தரவை பிறப்பிப்பீர்களா?. சட்டப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிப்பது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

Next Story