விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது


விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2019 11:00 PM GMT (Updated: 19 Dec 2019 10:51 PM GMT)

விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம், 

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகய்யா(வயது 54). இவர், அருகில் உள்ள செஞ்சிஅகரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம், சீனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரரெட்டி(53) என்ற விவசாயி, தனக்கு சொந்தமான வயலில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க மின்சார வாரியத்தில் இணைப்பு பெற சிட்டா நகல் வழங்குமாறு அணுகினார். அதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் தரும்படி முருகய்யா கேட்டதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருணாகரரெட்டி, இது குறித்து தனது மகன் விவேக்(31) உடன் சேர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். முருகய்யாவை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயன பொடி தடவி ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

அதன்படி நேற்று இரவு விவேக் ரூ.20 ஆயிரத்துடன் ஊத்துக்கோட்டை அருகே பனப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு முருகய்யாவை வரவழைத்து பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முருகய்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story