கணவருடன் செல்போனில் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


கணவருடன் செல்போனில் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 20 Dec 2019 4:27 AM IST (Updated: 20 Dec 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

மாடியில் இருந்து கணவருடன் செல்போனில் பேசி கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி, 

புதுவை ஜீவானந்தபுரம் பாலாஜி வீதியை சேர்ந்தவர் திருமலை. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் செல்வி (வயது 23). இவருக்கும், பெரம்பலூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த செல்விக்கு குழந்தை பிறந்து தற்போது 9 மாதங்கள் ஆகிறது. குழந்தை குறிப்பிட்ட வயது வளரும் வரை பெற்றோர் வீட்டில் இருப்பது என செல்வி முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் அவ்வப்போது புதுவை வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் இருந்து செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வீட்டின் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டவுடன் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது செல்வி தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்விக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்விக்கு திருமணமாகி 2 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story