முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் 3,411 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 3,411 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.வி.வீரமணி வழங்கினார்.
வேலூர்,
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூரை அடுத்த இடையன்சாத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆவின்தலைவர் வேலழகன், கணியம்பாடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எம்.ராகவன், பென்னாத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.அருள்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். வேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 1,750 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 1,124 பேருக்கு விலையில்லா ஆடுகள், கோழிகள், 50 பேருக்கு புதிய ரேஷன் உள்பட 3 ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 27 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 55 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 32 ஆயிரத்து 555 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குறைதீர்வு கூட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 523 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை மக்கள் தேடி செல்லும் நிலை மாறி தற்போது மக்களை தேடி அதிகாரிகள் வருகின்றனர். இத்தகைய சிறப்பு குறைதீர்வு கூட்டத்தின் மூலம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் வழிசெய்யப்படுகிறது.
2023-ம் ஆண்டு தமிழகத்தை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன் என்று கூறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டினார். அதனை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழகம் பல்வேறு துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்பட 14 விலையில்லா உபகரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அண்டை மாநிலங்களில் இல்லாத பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காமராஜ், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வி.ராமு, மாவட்ட துணைசெயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜெயப்பிரகாசம், முன்னாள் கவுன்சிலர்கள் ஏ.ஜி.பாண்டியன், டி.எஸ்.குப்புசாமி, கே.ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆர்.குமார், பெருமாள், எஸ்.பாபு, பென்னாத்தூர் பேரூராட்சி துணை செயலாளர் ராஜா, தாசில்தார்கள் சரவணமுத்து, ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story