கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம், அரசு பள்ளிக்குள் புகுந்து மேசை, நாற்காலிகளை சேதப்படுத்தின
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்கிறது. அரசு பள்ளிக்குள் புகுந்து மேசை, நாற்காலிகளை சேதப்படுத்தின.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனத்தை விட்டு இரவில் வெளியேறும் காட்டுயானைகள் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. மேலும் வீடுகள், ரேஷன் கடைகள், பள்ளிகளை இடித்து அட்டகாசம் செய்து வருகின்றன. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலக்காடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வனத்தின் எல்லையில் உள்ளதால், காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. கடந்த 2 மாதங்களாக மூலக்காடு அரசு பள்ளிக்கு காட்டுயானைகள் அடிக்கடி வருகின்றன. மேலும் பள்ளி கட்டிடம், கதவு மற்றும் பீரோ, மேசை உள்ளிட்ட தளவாட பொருட்களை சூறையாடி விட்டு செல்கின்றன. தொடர்ச்சியாக 3 முறை காட்டுயானைகள் பள்ளியை முற்றுகையிட்டு சேதப்படுத்தி உள்ளன. இதனால் மாணவர்கள் பீதி அடைந்தனர். மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள், வனத்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.
மேலும் வனத்துறை ஊழியர்கள் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் முகாமிட்டு காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் அப்பகுதிக்கு காட்டுயானைகள் வந்தால் உடனடியாக விரட்டுவதற்கும் வன உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் காட்டுயானைகள் வருகை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு குட்டியுடன் காட்டுயானைகள் வந்தன. தொடர்ந்து இரவு முழுவதும் அரசு பள்ளியை முற்றுகையிட்டன. அப்போது பள்ளி கதவை உடைத்து குட்டியானை உள்ளே புகுந்தது. மேலும் காட்டுயானைகள் மேசை, பீரோ, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
மேலும் சத்துணவு கூடத்தில் இருந்த உணவு பொருட்களை தின்றன. விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டுயானைகள் வனத்துக்குள் சென்றன. நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தனர். அப்போது காட்டுயானைகள் பள்ளியை சேதப்படுத்தி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வருவாய் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
அரசு பள்ளியில் 4-வது முறையாக காட்டுயானைகள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளன. ஏற்கனவே சேதப்படுத்திய பொருட்களுக்கு வனத்துறை மூலம் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. எனவே பள்ளியை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுயானைகள் வருகையை தடுக்க மின்வேலி அமைத்து தர வேண்டும். பள்ளிக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதேபோன்று கூடலூர் தாலுகா தேவர்சோலையில் இருந்து உட்பிரையர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 8½ மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு ஆட்டோ சென்றது. ஆட்டோவில் டிரைவர் மோகன் மற்றும் சில பயணிகள் இருந்தனர். அப்போது எதிரே காட்டுயானை ஒன்று வந்தது. இதை கண்ட டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் அவரும், பயணிகளும் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடினர். எனினும் ஆவேசத்துடன் வந்த காட்டுயானை ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர்.
இது தவிர கூடலூர் தாலுகா புளியாம்பாரா பகுதியில் நெல் ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான வயலில் பயிரிட்டு இருந்த நெற்கதிர்களை காட்டுயானை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.
ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓடக்கொல்லியில் சந்திரன் என்பவரது குடிசை வீட்டை காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. அப்பகுதியில் நின்றிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்சு-1 பாலவாடி லைன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 காட்டுயானைகள் புகுந்தன. அப்போது டேன்டீ மேற்பார்வையாளர் தவமணி, ஆராயி, சின்னையா, லட்சுமி, பரமேஸ்வரி, மணி ஆகியோரின் வீடுகளின் மேற்கூரைகளை சேதப்படுத்தின. மேலும் குடங்கள், தண்ணீர் தொட்டிகளை உடைத்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டினர்.
Related Tags :
Next Story