ஊரடங்கு உத்தரவு நீடிப்பு-இணையதள சேவை முடக்கம்: மங்களூருவுக்குள் வெளியாட்கள் நுழைய தடை


ஊரடங்கு உத்தரவு நீடிப்பு-இணையதள சேவை முடக்கம்: மங்களூருவுக்குள் வெளியாட்கள் நுழைய தடை
x
தினத்தந்தி 21 Dec 2019 12:15 AM GMT (Updated: 20 Dec 2019 7:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக மங்களூருவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதனால் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது.

இணையதள சேவையும் முடக்கப்பட்டு உள்ளது. மங்களூருவுக்குள் வெளியாட்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மங்களூரு, 

மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தென்னிந்தியாவிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக கடந்த 19-ந் தேதியே, போராட்டம் நடத்த தடை விதித்து கர்நாடகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடக கடலோர மாவட்டமான முஸ்லிம்கள் அதிகம் வாழும் தட்சிண கன்னடா மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தடை உத்தரவை மீறி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

இதற்கிடையே தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தலப்பாடி, பைக்கம்பாடி உள்பட மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி அவசர உதவி தேவைப்படுபவர்களின் வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.

இதுமட்டுமல்லாமல் மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவும் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் நீடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

“வன்முறை ஏற்பட்டதால் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மங்களூருவில் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. போலீஸ் ஐ.ஜி. தயானந்த் தலைமையில் 3 மாவட்ட போலீசார் மங்களூருவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவசர உதவி தேவைப்படுபவர்களை தவிர்த்து வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். அதை மீறி இன்று(அதாவது நேற்று) காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த சில வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளனர்.

வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் மரணம் அடைந்துவிட்டனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தங்கள் தற்காப்புக்காகவே துப்பாக் கிச்சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயம் அடைந்துள்ளனர். அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 துணை போலீஸ் கமிஷனர்களுக்கு கால் எலும்புகள் உடைந்துள்ளன. காயம் அடைந்த அனைத்து போலீசாரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போராட்டத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

தற்போது மங்களூருவில், முற்றிலும் அமைதி நிலவுகிறது. நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று(நேற்று முன்தினம்) இரவு முதல் இன்று(நேற்று) காலை வரையில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஊரடங்கு உத்தரவு வருகிற 22-ந் தேதி(நாளை) வரை அமலில் இருக்கும். பாதுகாப்பு கருதி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் மங்களூருவில் நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. வன்முறையும், கலவரமும் வெடித்தது. ஆங்காங்கே போராட்டக்காரர்கள் வாகனங்கள், பொருட்கள், டயர்களை எரித்தும், அரசு பஸ்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. சில இடங்களில் போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. அதுமட்டுமின்றி உப்பினங்கடி உள்பட பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். போராட்டத்தையொட்டி நேற்றும் உல்லால், தொக்கொட்டு, கோட்டேகார், தலப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களையும், 2 மற்றும் 3 பேராக கும்பலாக வந்து தெருக்களில் நடமாடியவர்களையும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல் காயமடைந்து போலீசாருக்கு தெரியாமல் வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் யாரேனும் சிகிச்சை பெற்று வருகிறார்களா? என்று கண்டறிய நேற்று போலீசார் அதிரடியாக ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சோதனை நடத்தினர். இது அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், முன்னாள் மந்திரிகள் பசவராஜ் ராயரெட்டி, எம்.பி.பட்டீல், சீதாராம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உக்ரப்பா ஆகியோர் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்கள் மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தனர். அதோடு போராட்டத்தின்போது காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் போராட்டக்காரர்களையும் சந்தித்து ஆறுதல் கூற முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர்களை போலீசார் விமான நிலையத்தின் முன்பு வைத்து கைது செய்தனர். அங்கிருந்து அவர்களை வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாரிடம், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் போலீசாரிடம், “நான் போராட்டத்தில் ஈடுபடவோ, கலவரத்தை தூண்டவோ இங்கு வரவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவே வந்தேன், என்னை ஏன் தடுக்கிறீர்கள்“ என்று ஆவேசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது போலீசாருக்கும், அங்கிருந்த ரமேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அதிரடியாக வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை மங்களூருவுக்குள் வெளியாட்கள் யாரும் நுழைய அனுமதி இல்லை என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மங்களூருவுக்கு ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவையொட்டி மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் எதுவும் இயங்கவில்லை. நேற்று மதியம் துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து அவர்களுடைய குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்காக ஊரடங்கு உத்தரவு 2 மணி நேரம் தளர்த்தப்பட்டது. அப்போது சில கடைகளும் திறக்கப்பட்டன.

அந்த சமயங்களில் மசூதிகளுக்கு சென்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். மக்களும் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். தொடர்ந்து மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story