சிறுகனூர், தனியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சிறுகனூர், தனியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுகனூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 100 பேர் ஒன்று திரண்டு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மேலும் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் தடுக்கும் வகையில், அந்த கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களை அறைக்கு வெளியே செல்ல கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story