டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
தொண்டி அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணியாளர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பெருமானேந்தல் புதுக்குடி கிராமத்திற்கு எதிரே தளிர் மருங்கூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் கடந்த 13-ந்தேதி புதிதாக அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த தளிர்மருங்கூர், பாகனவயல், புதுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் சேகர் தலைமையிலான வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளிடம், இங்கு அரசு மதுபானக்கடை அமைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே இங்கு மதுபான கடை திறக்க அனுமதிக்கமாட்டோம் என கூறி கடையின் முன்பு தரையில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் இந்த கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்றும் உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த கடை அன்றைய தினம் திறக்கப்பட வில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அங்கு டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை நடைபெற்றது. இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்பு குவிந்து அங்கு பணியில் இருந்த பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடையை பூட்டி விட்டு பணியாளர் தப்பி சென்றுவிட்டாராம். பின்னர் அங்கிருந்த பெண்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி கற்களை சாய்த்து சேதப்படுத்தியதுடன் அதிகாரிகள் வந்து இங்கு கடையை திறக்கமாட்டோம் என எழுத்து பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என ஆவேசமாக கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றநிலை உருவானது.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் சேகர், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றனர். பெண்கள் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் தனியாக திரும்பி கொண்டிருப்பார்கள். இங்கு மதுபானக்கடை அமைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே இங்கு அரசு மதுபான கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இதுபற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், ஆயம் உதவி ஆணையர் ஆகியோருடன் செல்போனில் இங்குள்ள நிலைமை குறித்து எடுத்து கூறினர். இதனை கேட்டறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் புதிதாக திறக்கப்பட்ட கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த தகவலை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story