சாலையில் படுத்து இருந்த மாடு மீது மோதல்: மோட்டார் சைக்கிள் விபத்தில் - கல்லூரி மாணவர் பலி


சாலையில் படுத்து இருந்த மாடு மீது மோதல்: மோட்டார் சைக்கிள் விபத்தில் - கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 21 Dec 2019 4:45 AM IST (Updated: 21 Dec 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் படுத்து இருந்த எருமை மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் அஜய் (வயது 19). இவர், போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

வெளியூரில் இருந்து விமானத்தில் வரும் தனது நண்பரை அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை அஜய், தனது மோட்டார் சைக்கிளில் சென்னை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவேற்காடு, காடுவெட்டி அருகே ஆவடி-சென்னீர்குப்பம் சாலையில் சென்றபோது, சாலையில் படுத்திருந்த எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அஜய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருவேற்காடு அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (27). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வானகரத்தில் இருந்து அம்பத்தூருக்கு பைபாஸ் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மதுரவாயல் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மதன்ராஜ், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story