யானை கொல்லப்பட்ட விவகாரம்: வன காப்பாளர், வனவர் பணி இடைநீக்கம்


யானை கொல்லப்பட்ட விவகாரம்: வன காப்பாளர், வனவர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

யானை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வன காப்பாளர், வனவர் ஆகிய 2 பேரை பணி இடைநீக்கம் செய்து வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில் தந்தத்திற்காக ஆண் யானை ஒன்று கொல்லப்பட்டதாகவும், பின்னர் அந்த யானை குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் பிலிக்கல் என்ற இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் இறந்த யானை ஒன்று குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த யானை புதைக்கப்பட்ட இடத்தை வனத்துறை அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் தோண்டினார்கள். அங்கு யானை புதைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகி இருந்ததால் எலும்பு கூடாக இருந்தது. யானையின் தலைப்பகுதி இருந்த மண்டை ஓட்டை வனத்துறையினர் சேகரித்தனர். அதை அஞ்செட்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்த யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதா? என்று வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று 2-வது நாளாக பிலிக்கல் மற்றும் தாண்டியம் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் யானை கொன்று புதைக்கப்பட்ட தகவல் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும், ரோந்து பணியை சரியாக மேற்கொள்ளாமல் இருந்ததற்காகவும் வன காப்பாளர் மாணிக்கம், வனவர் வேணு ஆகிய 2 பேரை தற்காலிக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது கூறியதாவது:-

பிலிக்கல் பகுதியில் ஒரு யானை புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது புதைக்கப்பட்டு நீண்ட நாட்களாக இருக்கும் என்று தெரிகிறது. அதன் தலை பகுதி எலும்பு கூட்டை எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகிறோம். இந்த யானை இயற்கையாக இறந்து பின்னர் அதன் தந்தங்கள் எடுக்கப்பட்டதா? அல்லது யானை கொல்லப்பட்டதா? என விசாரித்து வருகிறோம்.இதே போல பிலிக்கல் மற்றும் தாண்டியம் பகுதியில் மேலும் 2 யானைகள் இறந்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story