கர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை
கர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்படி அவர், போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பெங்களூரு,
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கர்நாடகத்தில் சிறுபான்மையினரின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், கூடுதல் கமிஷனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை டி.ஜி.பி. தாக்கல் செய்தார். இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அமைதியை நிலைநாட்ட எடுத்துள்ள நடவடிக்கைகளை போலீசார் விளக்கி கூறினர். மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கியுள்ளேன்.
நாளை (அதாவது இன்று) மங்களூரு செல்கிறேன். மங்களூருவில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு உடுப்பிக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெஜவார் மடாதிபதியை சந்தித்து நலம் விசாரிப்பேன். அதன் பிறகு நான் பெங்களூரு திரும்புவேன். என்னுடன் பசவராஜ் பொம்மை, ஷோபா எம்.பி. ஆகியோரும் வருகிறார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story