காய்கறி, பழ பயிர்களை அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் - விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


காய்கறி, பழ பயிர்களை அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் - விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:15 AM IST (Updated: 21 Dec 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி, பழ பயிர்களை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு, 

மனித ஆரோக்கியத்துக்கு தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகளும், பழங்களும் முக்கிய வங்கு வகிக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளும், 100 கிராம் பழங்களும் உண்ண வேண்டும். தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம் காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நபர் ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகளும், 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கின்றன.

திட்டம் அறிமுகம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில் உற்பத்தியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2018-2019-ம் ஆண்டில் 5.8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர்களும், 7.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பழ பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் 60 லட்சம் டன் காய்கறிகளும், 57 லட்சம் டன் பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறி பயிர்கள் சாகுபடியையும், 5 ஏக்கர் பழ பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 100 விலையில்லா காய்கறி விதை தளைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விதை தளையிலும், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல், புடலை உள்ளிட்ட 7 விதமான காய்கறி விதைகளும், சாகுபடி செய்வதற்கு தேவையான இயற்கை உரமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 500 காய்கறி தளைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

பழ மரக்கன்றுகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையையே அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம்.

விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் குறைந்தபட்சம் 3-ல் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழ பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், பழமரக்கன்றுகள், நிழல்வலைக்கூடங்கள், வேளாண்மை எந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளர்ப்பு, அறுவடைக்கு பின் செய்நேர்த்தி செய்வதற்கு தேவையான உட்கட்டமைப்புகளுக்கு மானியம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பாசனம் பெறும் சாகுபடி பரப்பை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடம் பிரபலப்படுத்தி வருகிறது. இதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story