தஞ்சை அருகே, மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி - உரிய நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து மறியல்


தஞ்சை அருகே, மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி - உரிய நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி உரிய நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால் மரணமடைந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலியமங்கலம், 

தஞ்சை அருகே உள்ள புலவர்நத்தம் கள்ளிமேடு மேலத்தெருவை சேர்ந்தவர் ராமு(வயது47). விவசாயி. இவர் நேற்று தஞ்சை - நாகை சாலையில் புலவர்நத்தம் பஸ் நிறுத்தம் பகுதியிலிருந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்புறம் வந்த மோட்டார் சைக்கிள் ராமு மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு படுகாயமடைந்தார். ராமு மீது மோட்டார் சைக்கிளை மோதிய நபர் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே சம்பவ இடத்தில் திரண்ட மக்கள் ராமுவை மீட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்சில் ராமுவை போலீசார் ஏற்ற முயன்றனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ராமு உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு மீது மோட்டார் சைக்கிளை மோதிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் காயமடைந்த விவசாயி ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இறந்த சம்பவம் புலவர்நத்தம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story