பாளையங்கோட்டையில் துணிகரம்: சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை


பாளையங்கோட்டையில் துணிகரம்: சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 20 Dec 2019 11:15 PM GMT (Updated: 20 Dec 2019 9:09 PM GMT)

பாளையங்கோட்டையில் சுகாதார அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அண்டாக்களில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அள்ளிச்சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 55). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கீரனூரில் சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தங்க மாரியம்மாள். இவர்களுக்கு சுரே‌‌ஷ்குமார் என்ற மகனும், சுமத்ரா ராணி என்ற மகளும் உள்ளனர்.

சுரே‌‌ஷ்குமார் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மகள் சுமத்ரா ராணி பழனியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதையொட்டி தமிழ்ச்செல்வன் பழனியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். அங்கு மகள் மற்றும் குடும்பத்தினர் தங்கி உள்ளனர். பாம்பனில் சுரே‌‌ஷ்குமார் உடன் தாய் தங்க மாரியம்மாள் வசித்து வருகிறார்.

தமிழ்ச்செல்வன் வாரத்தில் விடுமுறை நாட்களில் வி.எம்.சத்திரம் வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் புறப்பட்டு நேற்று மாலை நெல்லைக்கு வந்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலும் போலீசார் வந்தனர்.

வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த 2 அண்டாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 ஆயிரமும் திருடப்பட்டு இருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நேற்று முன்தினம் இரவில் தமிழ்ச்செல்வன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் இரவில் நீண்டநேரம் தங்கியிருந்து நகை, பணம் இருக்கிறதா? என்று தேடி உள்ளனர். இதில் அண்டாக்களில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.

இதே தெருவில் உள்ள ராஜா சிங் என்பவரது பக்கத்து வீட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர். போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலக ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் சென்னையில் தங்கி உள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story