புதுவையில் 23-வது தேசிய புத்தக கண்காட்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்


புதுவையில் 23-வது தேசிய புத்தக கண்காட்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:36 AM IST (Updated: 21 Dec 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 23-வது தேசிய புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் 23-வது தேசிய புத்தக கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜான்குமார், புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்க தலைவர் முத்து, மலேசிய மகளிர் சங்க தலைவர் ராமநாயகம், கண்ணையன் ஜி.கருமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதிகேசவன் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் 8 எழுத்தாளர்கள் எழுதிய 11 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்ற கருப்பொருளை கொண்டு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

கண்காட்சியில் 122 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இங்கு விற்பனை செய்யும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக மகாராஜா, புத்தக மகாராணி விருது வழங்கப்படும். ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக இளவரசன், புத்தக இளவரசி விருது வழங்கப்படும். ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக விரும்பி சான்றிதழ் வழங்கப்படும். தினமும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்காட்சியில் தினந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Next Story