திருச்சியில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி தச்சு வேலையில் ஈடுபட்டபோது பரிதாபம்


திருச்சியில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி தச்சு வேலையில் ஈடுபட்டபோது பரிதாபம்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:45 AM IST (Updated: 21 Dec 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தச்சு வேலையில் ஈடுபட்ட தந்தை, மகன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

திருச்சி,

திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இ.பி.ரோடு வேதாத்திரி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 61). தச்சு தொழிலாளி. இவருைடய மனைவி பானுமதி. இத்தம்பதிக்கு செந்தில்குமார் (33) என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்குமே திருமணம் ஆகி விட்டது.

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில் தொழிலாளியாக செந்தில்குமார் வேலை பார்த்து வந்தார். சில சமயங்களில் தந்தைக்கு உதவியாக மரம் அறுக்கும் தச்சு வேலையிலும் அவர் ஈடுபட்டு வந்தார். சீனிவாசனின் மூத்த மகள் கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் ரெங்கநாயகி, தனது கணவர் பெருமாளுடன், பெற்றோர் வசிக்கும் வீடு அருகே தனியாக குடியிருந்து வருகிறார்.

மனைவியை பிரிந்தார்

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்த ‌‌ஷகிலாபானு என்ற பெண்ணை செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது 2 குழந்தைகளுடன் திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ‌‌ஷகிலாபானு சென்று விட்டார். இதனால், செந்தில்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவையில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு பானுமதி சென்று விட்டார். அவர் நேற்று காலை தனது கணவருடன் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை செல்போனில் ‘ரிங்’ ெசன்றுள்ளது. ஆனால் செல்போனை எடுத்து யாரும் பேசவில்லை. இதைத்தொடர்ந்து அவர், தனது இளைய மகள் ரெங்கநாயகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சீனிவாசனின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது எடுக்காதது பற்றி கூறியுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து பலி

இதையடுத்து ரெங்கநாயகி, தனது தந்தை மற்றும் சகோதரர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்காக சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். அங்கு மரவேலை செய்த இடத்தில் சீனிவாசனும், செந்தில்குமாரும் இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார். பின்னர் அக்கம், பக்கத்தினரும் அங்கு திரளாக கூடி விட்டனர். ேநற்று காலை சீனிவாசனும், அவருக்கு உதவியாக செந்தில்குமாரும் வீட்டில் மின்எந்திர உதவியுடன் மர வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர்கள் 2 பேரும் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் வேலை செய்தபோது தந்தை-மகன் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story