திருவள்ளூர் மாவட்டத்தில், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாத ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாத ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாத ஆஸ்பத்திரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,

இந்திய அரசு சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மூலம் உயிரியல் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016 வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி அனைத்து ஆஸ்பத்திரிகள், கால்நடை ஆஸ்பத்திரிகள், ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், தடுப்பூசி மையங்கள், ரத்த வங்கி முகாம்கள், பள்ளிகளில் உள்ள முதல் உதவி மையங்கள், ரத்த பரிசோதனை மையங்கள், நோயியல் ஆய்வகங்கள் என அனைத்தும் மேற்சொன்ன விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ திட கழிவுகளை முறையாக கையாண்டு அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று அப்புறப்படுத்த வேண்டும் என வழிவகை உள்ளது.

மேற்சொன்ன ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் அந்தந்த வளாகத்திலேயே முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வழிவகை உள்ளது.

மேலும் மருத்துவ திடக்கழிவுகளை தாங்களே கையாள இயலாத காரணங்களால் சென்னை புறநகர் பகுதிகளில் 2 பொது மருத்துவ திடக்கழிவு மையங்கள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் தங்களது மருத்துவ கழிவுகளை 2 பொது மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு அனுப்பி கையாளப்பட்டு வருகிறது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மருத்துவ கழிவுகள், காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் குப்பை கழிவுகளுடன் சேர்த்து கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

அதன் அடிப்படையில் அவ்வப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அங்கே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை சேகரித்து பொது மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு அனுப்பி கையாளப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகள், கால்நடை ஆஸ்பத்திரிகள், ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், தடுப்பூசி மையங்கள், ரத்த வங்கி முகாம்கள், பள்ளிகளில் உள்ள முதலுதவி மையங்கள், ரத்த பரிசோதனை மையங்கள், நோயியல் ஆய்வகங்கள் தங்களது மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து பிரித்து மேற்சொன்ன 2 பொதுமருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு மட்டுமே அனுப்புமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி மூடுதல் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆஸ்பத்திரிகள் மற்றும் பொது மருத்துவ திடகழிவு மையங்களில் இருந்து மருத்துவ கழிவுகளை நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலும் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமேயானால் அவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகை பெறப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story