குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:30 AM IST (Updated: 22 Dec 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் பழைய மீன்மார்கெட் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அய்யூப்கான் தலைமை தாங்கினார். நாகர்கோவில் தலைமை இமாம் இஸ்லாமிய கலாசார கழக நிர்வாகி ‌‌ஷவ்கத் அலி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன், தி.மு.க. நகர செயலாளர் தமிழழகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போக்குவரத்து நெரிசல்

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ‌ஷாஜகான், த.மு.மு.க. மாவட்ட தலைவர் செல்லப்பா, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொது செயலாளர் இப்ராஹிம், மனித நேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் பாது‌ஷா, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது மக்ரூப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் குலாம் உசேன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story