இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதே அ.தி.மு.க.வின் நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதே அ.தி.மு.க.வின் நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:45 AM IST (Updated: 22 Dec 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதே அ.தி.மு.க.வின் நோக்கம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெரம்பூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காட்பாடா தெருவில் உள்ள இந்துக்கள் மயான பூமியில், ‘மனிதர்களால் உருவாக்கப்படும் காடுகள்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவை ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.

இதில் சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டல அதிகாரி லாரன்ஸ், செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி பொறியாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தனியார் அமைப்பு சார்பில் இதற்காக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளது. மரக்கன்றுகளை 3 ஆண்டுகளுக்கு அந்த தனியார் அமைப்பே பராமரிக்கும். செடிகளுக்கு ஊற்ற தேவையான தண்ணீரை மட்டும் மாநகராட்சி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். இது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

தி.மு.க. பேரணியில் நடிகர் களை பார்ப்பதற்காகவே கூட்டம் வரும் என்பதால்தான் மு.க.ஸ்டாலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் நடிகர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. துரோகம் செய்து உள்ளது. ஆனால் இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதே அ.தி.மு.க.வின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story