நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி


நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:30 AM IST (Updated: 22 Dec 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் காலையில் இருந்து வெயில் அடித்தது. மதியம் 1 மணிக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மழை பெய்தது.

நேற்று முன்தினம் நெல்லை, பாளையங்கோட்டை, டவுன் பேட்டை பகுதியில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் நெல்லை, டவுன், மேலப்பாளையம் பகுதியிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலப்பாளையம் மாட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடலிலும், சந்திப்பு பஸ்நிலையத்தின் வடபகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது.

இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் பாபநாசம் அணைப்பகுதியில் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, சங்கரன்கோவில், தென்காசி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.

143 அடி முழுக்கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 142.45 அடி உள்ளது. அணை முழுக்கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வருகின்ற 2 ஆயிரத்து 461 கன அடி தண்ணீர் அப்படியே மதகுகளின் வழியாக திறந்து விடப்படுகிறது. 118 அடி முழுக்கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 113.40 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,462 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் பாசனத்திற்காக 315 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வடக்கு பச்சையாறு 45.50 அடியாகவும், நம்பியாறு 21.32 அடியாகவும், கொடுமுடியாறு 43 அடியாகவும் உள்ளது. கடனாநதி 84.50 அடியாகவும், ராமநதி 83.25 அடியாகவும், கருப்பாநதி 70.21 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை 126.25 அடியாகவும் உள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு வருமாறு(மி.மீ.்):-

ராதாபுரம்-69, நம்பியாறு-62, கொடுமுடியாறு-50, நாங்குநேரி-47, சேர்வலாறு-42, பாபநாசம்-35, மணிமுத்தாறு-31, அம்பை-29, சேரன்மாதேவி-20, பாளையங்கோட்டை-19. நெல்லை-15, ராமநதி-15, கடனாநதி-6, குண்டாறு-9, கருப்பாநதி-2.5, அடவிநயினார் அணை-2, தென்காசி-7, செங்கோட்டை-8, ஆய்குடி-5, சங்கரன்கோவில்-5, சிவகிரி-4.

Next Story