ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு


ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2019 3:30 AM IST (Updated: 22 Dec 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமேசுவரம்,  

இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழுவினர் நேற்று ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் ரமேஷ் சந்திரா ரத்தன் மற்றும் குழு உறுப்பினர்கள் வெங்கட்ரமணி, சுந்தர், பஞ்சனன் ரவுட் ஆகியோர் ரெயில் நிலையத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்த பயணிகளிடம் ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும், ரெயில்நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படுவதையும், உணவு விடுதிகள், அவசரகால மருத்துவ உதவி மையம், குடிநீர் விற்பனை எந்திரம், குடிநீர் குப்பிகள் உடைக்கும் எந்திரம் ஆகியவை சுகாதாரமாக இருப்பதையும் பார்த்து பாராட்டு தெரிவித்தனர். இந்த குழுவுடன் கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி, முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, மக்கள் தொடர்பு அதிகாரி வீராசாமி ஆகியோர் உடன் வந்தனர்.

அதன் பின்னர் குழுவின் தலைவர் ரமேஷ் சந்திரா ரத்தன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டில் 3 மண்டலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டோம். அனைத்தும் திருப்தியளிக்கும் வகையில் இருந்தன. ராமேசுவரம் ரெயில் நிலையம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் ரெயில் நிலையத்தில் கூடுதலாக மின்விசிறிகள், மற்றும் பயணிகள் அமரும் இருக்கைகள் அமைக்க வலியுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாம்பன் ரெயில் பாலத்திலும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story