உள்ளாட்சி தேர்தல் பணிகள்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


உள்ளாட்சி தேர்தல் பணிகள்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:00 AM IST (Updated: 22 Dec 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை, 

மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்குச்சீட்டு பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான உபகரணங்கள் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகிறது. இந்த பணிகளை மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தோ்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் வாக்குச்சீட்டுகள், வாக்குச்சீட்டு பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூடுதல் வாக்குச்சீட்டு பெட்டிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், ஊரகப்பகுதிகளில் நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளருக்கு 4 ஓட்டுகள் என வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

மஞ்சள் நிற வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், பச்சை நிற வாக்குச்சீட்டு ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினருக்கும், இளஞ்சிவப்பு ஊராட்சி மன்றத்தலைவருக்கும், வௌ்ளை மற்றும் ஊதா நிற சீட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும் என நான்கு நிற வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

கிராமப்பகுதிகளில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளிக்க வேண்டும் என ஊராட்சி பணியாளா்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலா்களும், தங்கள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து உறுதிசெய்து கொள்வதுடன், பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ் தேவைப்பட்டால் மாவட்ட காவல்துறை அலுவலா்களிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தையும் ஆய்வு செய்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

Next Story