தேர்தல் நடத்தை விதிமுறைகளை அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு


தேர்தல் நடத்தை விதிமுறைகளை அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதி முறைகளை முழுமையாக அலுவலர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று 2-ம் கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நங்கவள்ளி, கெங்கவல்லி உள்பட 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது.

அதன்படி நங்கவள்ளி கைலா‌‌ஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு மற்றும் அங்கு அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

21,600 பணியாளர்கள்

12 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும், 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப் பதிவு வருகிற 30-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

2 கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தலுக்காக 2,741 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் சுமார் 21 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் ஈடுபடுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் முழுமையாக பின்பற்றி, இந்த தேர்தலை சிறப்பாக எவ்வித குறைபாடுகளுமின்றி நடத்திட வேண்டும்.

பொறுப்பும், கடமையும்

தேர்தலில் கட்சி சார்பற்று நடைபெறக்கூடிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், கட்சி சார்பாக நடைபெறக் கூடிய ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர். எனவே, இந்த 4 பதவி இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளதால் அலுவலர்களுக்கு பொறுப்பும், கடமையும் அதிகம் உள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இத்தேர்தல் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள கையேடுகள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் முழுமையாக படித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சி வகுப்பிலேயே அதை தெரிவித்து தங்களது சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

மண்டல அலுவலர்கள் வழங்கும் தேர்தல் வாக்குப்பதிவிற்கான பொருட்கள் அனைத்தும் இருக்கின்றதா? என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்து வழங்க வேண்டிய அனைத்து படிவங்களையும் விடுபடாமல் கட்டாயம் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பம் இடவேண்டும்.

மேலும் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி வகுப்பில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வக்குமார், ஓமலூர் உதவி கலெக்டர் குமரன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story