விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி 6 கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டம்


விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி 6 கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 3:45 AM IST (Updated: 22 Dec 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி 6 கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர், ஆமூர்குப்பம், டி.கொளத்தூர், ஒட்டனந்தல், பூசாரிப்பாளையம், கொண்டசமுத்திரபாளையம் ஆகிய 6 கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கிராமங்களை திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் நேற்று 6 கிராம மக்களும் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் தங்கள் கிராமங்களின் மையப்பகுதியில் கொட்டகை அமைத்து அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களது கோரிக்கைகள் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

இதை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

Next Story