பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேவரும் பழைய பாதை ஓரத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருந்தனர். இதனால் கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதையின் இணைப்பு சாலைக்கு சென்று வர பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகரசபை ஆணையர் ராமமூர்த்தி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் நகரமைப்பு அதிகாரி முரளி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த்ஜோதி மற்றும் ஊழியர்கள், தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்களும் பஸ்நிலையத்துக்கு வந்தனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வியாபாரிகள் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏற்கனவே பஸ்நிலையத்தில் புதியகடை கட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட சிறுவியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் சரியான முறையில் அளவீடுசெய்து கடைகள் ஒதுக்கித்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் எதிர்ப்பை கைவிட்டதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகடைகளை அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் பாவாணன், சொக்கு, ஸ்ரீதர், நகர செயலாளர் ராஜதுரை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சுப்புராயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கடலூர் பஸ்நிலையத்தின் உள்ளே கடை வைத்து நடத்துபவர்களுக்கு குடும்பத்துக்கு ஒரு கடை என்ற அடிப்படையில் கடைநடத்த அனுமதிக்க வேண்டும். பஸ்நிலையத்துக்கு வெளியே கடை வைத்துவியாபாரம் செய்பவர்களுக்கு பஸ்நிலையத்தின் உள்ளே கடை வைக்க அனுமதிக்க கூடாது என்றார்.
அப்போது அங்கு வந்த நகரசபை ஆணையர் ராமமூர்த்தி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் அலுவலகத்துக்கு வாருங்கள் என்றார். உடனே கட்சி நிர்வாகிகள் அனைவரும் கடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு நகரசபை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது.
பேச்சுவார்த்தை குறித்து நகரசபை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் ஒரு கடைக்கு 3 அடி அகலம் என்ற அடிப்படையில் 52 கடைகளுக்கு இடம் ஒதுக்கி தருவது என முடிவு செய்யப்பட்டது. இதை கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் ஏற்றுக்கொண்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story