தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை; விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி,
வெப்பசலனம் காரணமாக தென்தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 98 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழையால் நகர் பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை, லயன்ஸ் டவுன், தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதி, அம்பேத்கர் நகர் பகுதி, செல்வநாயகபுரம், சத்யா நகர், பூபால்ராயர்புரம், பொன்சுப்பையா நகர், செயின்ட் மேரிஸ் காலனி, திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் குமரி கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், அதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 240 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு;-
திருச்செந்தூர்-89
காயல்பட்டினம்-69
குலசேகரன்பட்டினம்-98
விளாத்திகுளம்-28
காடல்குடி-13
வைப்பாறு-15
சூரங்குடி-2
கோவில்பட்டி-5
கழுகுமலை-3
கயத்தாறு-14
கடம்பூர்-14
ஓட்டப்பிடாரம்-27
மணியாச்சி-53
வேடநத்தம்-8
கீழஅரசடி-11
எட்டயபுரம்-7
சாத்தான்குளம்-44.6
ஸ்ரீவைகுண்டம்-31
தூத்துக்குடி-34.5
Related Tags :
Next Story