குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும்வரை போராடுவோம் நாராயணசாமி உறுதி


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும்வரை போராடுவோம் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும்வரை போராடுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் ஜமா அத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகே நடந்தது. புதுச்சேரி, சுல்தான்பேட்டை, கோட்டக்குப்பம் வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் சார்பாக அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அனைத்து மகல்லா ஜமா அத் ஒன்றிணைந்து நடந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மவுலபி ஹாபீழ் முகமது மூசா தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கலவரம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்த வேதனையை கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதற்கிடையே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இதனை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் தங்களிடம் உள்ள பெரும்பான்மையை கொண்டு சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் நடக்கிறது.

உயிரே போனாலும்...

மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பிரகடனப்படுத்துகிறார். காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி டெல்லியில் பிரம்மாண்ட பேரணியை நடத்தி இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த சட்டத்தை எந்த காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைவரும் இதை எதிர்க்கின்றனர்.

ஆனால் அதிகார மமதையில் உள்ள மோடி, அமித்ஷா ஆகியோர் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பழிவாங்கவேண்டும் என்று திட்டமிட்டு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். எங்கள் உயிரே போனாலும், எங்கள் ஆட்சியை கவிழ்த்தாலும் இந்த சட்டத்தை புதுச்சேரியில் அமல் படுத்தமாட்டோம்.

போராட்டம் தொடரும்

புதுவையில் மதச்சார்பற்ற ஆட்சி நடக்கிறது. சிறுபான்மை சமுதாயத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்க தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல. மக்கள் சக்தி எங்கள் பக்கம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகள் முகாமில் 30 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இலங்கை தமிழர்களுக்கும் இந்த சட்டத்தில் குடியுரிமை வழங்க வழியில்லை. நாட்டை சீர்குலைக்கவேண்டும், துண்டாட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மக்களுக்கு துரோகம்

இந்த சட்டத்தை அ.தி.முக. ஆதரித்து மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். தற்போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவோம் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள்

இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் பாவாணன், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக புதுவை மாவட்ட தலைவர் பஷீர் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story