திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகவர் படிவம் வாங்க குவிந்த வேட்பாளர்கள்: தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகவர் படிவம் வாங்க குவிந்த வேட்பாளர்கள்: தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:05 AM IST (Updated: 22 Dec 2019 6:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகவர் படிவம் வாங்க வேட்பாளர்கள் குவிந்தனர். இதனால் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 13 ஊராட்சி தலைவர்கள், 8 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 114 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 38 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 64 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396 பேரும் போட்டியிடுகிறார்கள். 10 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கான படிவம் நேற்று காலை வழங்கப்பட்டது.

ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் படிவம் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 2 ஊழியர்கள் வேட்பாளர்களின் பெயர் விவரங்களை எழுதி படிவம் கொடுத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மேலும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு முகவர் படிவம் கிடையாது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லலாம் என்றும், மற்ற பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு முகவர் நியமிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன்பிறகு போலீசார் வந்து வரிசையில் வேட்பாளர்களை நிற்க வைத்து முகவர்களுக்கான படிவம் வழங்கப்பட்டது.

Next Story