மாநகராட்சிகளில் வார்டுக்கு 4 கவுன்சிலர்களை தேர்வு செய்யும் முறையை ஒழிக்கும் மசோதா; சட்டசபையில் நிறைவேறியது
வார்டுக்கு 4 கவுன்சிலர்களை தேர்வு செய்யும் முறையை ஒழிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் 27 மாநகராட்சிகள் உள்ளன. இதில் நிர்வாக வசதிக்காக ஒரு வார்டு அதிகபட்சமாக 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அங்கு இருந்து 4 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தநிலையில் இந்த முறையை ரத்து செய்யும் மராட்டிய மாநகராட்சிகள் திருத்த மசோதா நேற்று நாக்பூரில் நடந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மேல்-சபையிலும் நிறைவேறினால் அடுத்து வர இருக்கும் மாநகராட்சி தேர்தல்களில் ஒரு வார்டுக்கு ஒன்று அல்லது 2 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும்.
இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களுக்கு சிறந்த பிரதிநிதிகளை தருவதை இந்த மசோதா தோற்கடிக்கும் என அவர்கள் கூறினர்.
இந்த மசோதா மூலம் வார்டுகளின் பரப்பளவு, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இது பெரிய கட்சிகளுக்கு சாதகமாகவும், சுயேச்சைகள் மற்றும் அதிருப்தி வேட்பாளர்களுக்கு பாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story