குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத இந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதில் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதே கருத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று புனேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம்கள் அல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. அப்படியானால் இந்த சட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏன்?. இலங்கை தமிழர்கள் மத்திய அரசு பட்டியலிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் இல்லையா?” என்று கூறினார்.
மேலும் சரத்பவார் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று 8 மாநிலங்கள் கூறி உள்ளன. இதில் பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநிலமும் ஒன்று. இந்த மாநிலங்களை போல மராட்டியமும் முடிவு எடுக்க வேண்டும்.
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே, இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த பிரச்சினைகளில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை சிறுபான்மை இன மக்கள் மட்டும் இன்றி, நாடு ஒற்றுமையாகவும், வளமாக இருக்க நினைப்பவர்களும் எதிர்க்கிறார்கள். சமூக ஒன்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் இந்த சட்டங்கள் சீர்குலைக்கின்றன. ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
நேபாள மக்களும் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் கூட 2 நேபாளிகள் 30 வருடங்களாக வேலை செய்து வருகிறார்கள். இதேபோல ஏராளமான நேபாளிகள் வீட்டு வேலை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பொறுத்து முடிவு எடுக்க இருப்பதாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சி தலைவரான சரத்பவார், இந்த சட்டத்தை மராட்டியத்தில் அமல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story