மங்களூருவில் வன்முறை எதிரொலி: காங். முன்னாள் மந்திரி மீது தேசத்துரோக வழக்கு
மங்களூருவில் நடந்த வன்முறையை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் மீது போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு மாநகரில் கடந்த 19-ந்தேதி, 144 தடை உத்தரவை மீறி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதுடன், பொதுசொத்துக்களை தீவைத்து எரித்து சேதப்படுத்தினர்.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார், போராட்டக்காரர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டினர். இதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 2 பேர் பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 33 போலீசார் காயமடைந்தனர்.
இந்த நிலையில் மங்களூரு பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் சந்தேஷ் குமார் ஷெட்டி என்பவர் மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில், காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், மங்களூரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் தான் மங்களூருவில் நடந்த வன்முறைக்கு காரணம் எனக் கூறி ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
மங்களூருவில் கடந்த 19-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. யு.டி.காதர் தான் காரணம். இந்த போராட்டத்திற்கு முன்பாக யு.டி.காதர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அந்த புகாரின் பேரில் மங்களூரு தெற்கு போலீசார், யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது இந்திய தண்டனை சட்டம் 124 ஏ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 153 ஏ பிரிவின் கீழ் மதத்தின் பேரில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுதல், 153 பிரிவின் கீழ் அமைதியை சீர்குலைக்கும் வகையில் கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story