உஷாரய்யா உஷாரு..: ஆடம்பரமான வாழ்க்கைக்காக கணவனை மறந்த மனைவி
அவருக்கு வயது 45 இருக்கும். தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி ஒன்றின் சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு, சவாரி ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்.
அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சவாரிக்கு யாரும் வராததால் சலிப்படைந்து, ஆட்டோவை ஸ்டார்ட் செய்தபோது, சற்று தூரத்தில் இருந்து ஒருவர் தன்னை நோக்கி வருவதை பார்த்தார். அவர் கையில் சற்று பெரிய ‘பேக்’ ஒன்று இருந்தது. அவர் நடந்து வரும் வேகத்திலே ஆட்டோவுக்கான தேடல் இருந்ததை தெரிந்துகொண்டு, அவர் அருகில் கொண்டு போய் நிறுத்தினார்.
செல்லவேண்டிய இடத்தின் பெயரை கூறி, எவ்வளவு கட்டணம் என்று கேட்டார். ‘ஏறுங்க சார்.. கொடுக்கிறதை கொடுங்க..’ என்று வார்த்தைகளில் விரக்தியை வெளிப்படுத்தியபடி, அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பினார். பயணி, அந்த பகுதியில் அமைந்திருக்கும் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பல வருடங்களாக பணிபுரிந்துகொண்டிருப்பவர். பெரும்பாலும் அவர் காரில்தான் பயணிப்பார். தவிர்க்க முடியாத சூழலில் அன்று அவர் ஆட்டோவில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது.
வழக்கம்போல் செல்போனை நோண்டாமல் அமைதியாக பயணத்தை ரசித்த அந்த மேலாளர், ஆட்டோ டிரைவரின் முகத்தையே உற்றுப்பார்த்துவிட்டு ‘உங்களை இதுக்கு முன்னே பலதடவை பார்த்திருக்கிறேனே. பரிச்சயமான முகமாக தெரியுது. கார் ஏதாவது ஓட்டிக்கிட்டிருந்தீங்களா?’ என்று கேட்டார்.
‘ஆமா சார்.. கல்யாணத்துக்கு முன்பு என் சம்பாத்தியத்தில் வாங்கிய இன்னோவா காரை வாடகைக்கு ஓட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கிட்டிருந்தேன். நீங்ககூட அதில் பயணித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். கல்யாணமாச்சு! மனைவியை வாழ்க்கையில் முன்னேற்றியே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தால் தப்புத்தப்பா முடிவெடுத்ததால் அந்த காரும் போச்சு.. மனைவியும் போனாள். இப்போது தனிமரமாகி, அடுத்த வருக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வயித்தைக் கழுவிக்கிட்டு இருக்கேன்’ என்று தொடங்கி, அந்த ஆட்டோ டிரைவர் சொன்ன அவரது வாழ்க்கை கதை, இந்த மேலாளரின் கண்களை குளமாக்கிவிட்டது.
பாதிக்கப்பட்ட அவரது வாழ்க்கையில் நடந்தது இதுதான்: சொந்த இன்னோவா காரை ஓட்டி சம்பாதித்துக்கொண்டிருந்த போது, நர்ஸ் ஒருவரை காதலித்து மணந்திருக்கிறார். அவளுடன் பிறந்தது மூன்று பெண்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த அவள் திறமையானவள். ஆனால் திருமணமான புதிதில் சிறிய மருத்துவமனை ஒன்றில் குறைந்த சம்பளத்திற்கு வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளது தோழி ஒருத்தி, ‘கூடுதலாக படித்து இ்ன்னொரு தேர்வு எழுதினால், இங்கிலாந்தில் நர்ஸ் வேலைக்கு செல்லலாம். அதன் மூலம் நிறைய சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழலாம்’ என்று கூறியிருக்கிறாள்.
இந்த நர்சும் உடனடியாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாள். கணவரின் ஒப்புதலோடு வேலையை ராஜினாமா செய்தாள். கூடுதல் படிப்பான பயிற்சிக்கு சென்றாள். நீண்ட பயிற்சிக்கு பின்பு தேர்வு எழுதினாள். ஆனால் முதல் முறை தோல்வி யடைந்துவிட்டாள். மீண்டும் அதிக பணம் தேவைப்பட்டது. கணவரான இவரே கடன் வாங்கிக்கொடுத்திருக்கிறார். கடனுக்கு வட்டி கட்டமுடியாமல், என்ன செய்வதென்று யோசித்தபோது ‘இன்னோவா காரை விற்றுவிடுங்கள். சில லட்சங்கள் கிடைக்கும். அனைத்து கடன்களையும் அடைத்துவிடலாம். நான் இரண்டாவது முறை எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிடுவேன். உடனே வேலையும் கிடைத்துவிடும். நான் சம்பாதிக்க தொடங்கியதும் புதிய கார் வாங்கிவிடலாம். அதுவரை உங்கள் நண்பர்கள் யாருடனாவது சேர்ந்து ஏதாவது ஒரு வேலையை பாருங்கள்’ என்றிருக்கிறாள்.
மனைவியின் சொல்கேட்டு இவரும் காரை விற்றிருக்கிறார். கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். அவள் சொன்னபடியே பரீட்சையில் தேறினாள். இங்கிலாந்தில் தோழி வாயிலாக வேலை தேடினாள். உடனே வேலையும் கிடைத்தது. அங்கு கிளம்பிப்போய்விட்டாள்.
மூன்று தடவை மாதந்தோறும் கணவர் பெயருக்கு பணம் அனுப்பியிருக்கிறாள். அதன் பிறகு எப்போதாவது குறைந்த அளவு தொகையை மட்டும் அனுப்பியிருக்கிறாள். வருடங்கள் கழிந்தும் அவள் சொந்த ஊர் திரும்பிவரவில்லை. ஆனால் அதற்கிடையில் தனது தங்கைகள் இருவரையும் இங்கிலாந்தில் வேலைகிடைப்பதற்கு வாய்ப்புள்ள துறைகளில் நன்றாக படிக்கவைத்து அவர்களையும் அங்கேயே அழைத்துக்கொண்டிருக்கிறாள். மூன்று பேரும் வேலைபார்த்ததால் அதிகம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. அந்த பணத்தில் ஊரில் மிக ஆடம்பரமான வீட்டினை கட்டியிருக்கிறாள். அதன் பிறகு அவளது தாய் குடும்பத்தின் வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. அவர்கள் தங்களை அந்தஸ்துமிக்கவர்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கணவரான இவரை ஒதுக்கியிருக்கிறாள். ஊருக்கு வரும்போது, ‘ஆயுர்வேத சிகிச்சையில் இருக்கிறேன். அதனால் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தவிர்த்திருக்கிறாள். குடும்ப நிகழ்ச்சிகளில்கூட இவரை சேர்க்காமல், தனது தங்கைகள் இருவருக்கும் பெரிய இடங்களில் சம்பந்தம்பேசி ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்திருக்கிறாள்.
தன்னை மனைவி முழுமையாக புறக்கணிப்பதை உணர்ந்த இவர் விளக்கம்கேட்டபோது, ‘அழகு, அந்தஸ்து, மொழி, வாழ்க்கை முறை போன்ற அனைத்திலும் நீங்கள் பின்தங்கிவிட்டீர்கள். எங்கள் அளவுக்கு உங்களை இனி மாற்ற முடியாது. எனக்கு சமமாக நீங்கள் இல்லாததால் நாம் பிரிந்து விடுவோம். உங்களுக்கு புதுமாடல் இன்னோவா காரும், கூடுதலாக சில லட்சம் ரூபாய் பணமும் தருகிறேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறாள். அவளிடம் ‘நீ சம்பாதித்த ஒரு காசுகூட எனக்கு தேவையில்லை’ என்று கூறிவிட்டு, மீண்டும் பழைய நிலையில் இருந்து இவர் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். இன்னொருவருக்கு சொந்தமான ஆட்டோவை தினசரி வாடகைக்கு ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
அவள் அங்கேயே வாழும் இந்திய வம்சாவளி டாக்டரை திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டாளாம். இந்த ஆட்டோ டிரைவர் நடுத்தர வயதை நெருங்குவதால் இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
- உஷாரு வரும்.
Related Tags :
Next Story