டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர் - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வழியாக விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. அதைத்தவிர இந்த வழியாக திருப்பதி, மன்னார்குடி, புருலியா, கரக்பூர், ஹவுரா, ஐதராபாத், மும்பை தாதர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன.
வேலூர் மாநகரில் டவுன், கன்டோன்மென்ட் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் காணப்பட்டாலும், பொதுமக்கள் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தையே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் காணப்படும் டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள் முக்கிய காரணமாகும்.
வேலூர் மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் பணி, படிப்பு காரணமாக தினசரி திருவண்ணாமலை, விழுப்புரம், திருக்கோவிலூருக்கும், சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை, திருப்பதிக்கும் செல்கின்றனர். இவ்வாறாக செல்பவர்கள் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்துகிறார்கள். இங்கு மோட்டார் சைக்கிள் நிறுத்த முதல் நாளைக்கு 10 ரூபாயும், 2-வது நாள் முதல் ஒருநாளைக்கு 15 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கார், வேன் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கு முதல் நாள் 25 ரூபாய் வீதமும், அதைத்தொடர்ந்து ரூ.40 வீதம் வாடகை பெறப்படுகிறது.
வெளியூருக்கு ரெயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்கின்றனர். இங்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்ய மோட்டார் சைக்கிள், 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள் சுமார் 10 நிமிடங்களில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து டிக்கெட் பெற்று செல்கிறார்கள். டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாகன ஓட்டிகள் ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அவர்களிடம் ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர் வாடகை வசூலிக்கிறார்.
வாகனங்களை நிறுத்தும்போது டோக்கன் வழங்கி பணம் பெறாமல், டிக்கெட் எடுத்துவிட்டு வரும்போது டோக்கனை காண்பித்து வாடகையை கட்டாயப்படுத்தி பெறுகிறார். இதற்கு உடன்படாத வாகன ஓட்டிகளை மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியாக குத்தகைதாரர் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை ரெயில் நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாகன ஓட்டிகளிடம் அடாவடியாக வாடகை வசூலிக்கும் குத்தகைதாரர் மீது ரெயில் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story