அறந்தாங்கி அருகே கார் மரத்தில் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலி- நண்பர் படுகாயம்


அறந்தாங்கி அருகே கார் மரத்தில் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலி- நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளரை வீட்டிற்கு அழைத்துவர சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் கவின்பிரவின்(வயது 19). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்வதற்காக இடையன்காடு பகுதிக்கு நேற்று சென்றார்.பின்னர் அவரை, வீட்டிற்கு அழைத்து வர கவின்பிரவின், அவருடைய நண்பர் துரையரசபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தின் மகன் பாலாஜியுடன்(19) காரில் சென்றார். பாலாஜி, புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காரை கவின்பிரவின் ஓட்டினார்.

சாவு

அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையில் உள்ள வைரிவயல் என்ற இடத்தில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கவின்பிரவின் படுகாயமடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடிக்கடி விபத்து

விபத்து குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையில் உள்ள வைரிவயல் பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து, உயிரிழப்பு ஏற்படுவதால், சாலை ஓரத்தில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைத்து, டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story