லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி - டிரைவர் உயிர்தப்பினார்


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி - டிரைவர் உயிர்தப்பினார்
x
தினத்தந்தி 23 Dec 2019 3:45 AM IST (Updated: 23 Dec 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்பு சுவரில் லாரி மோதி அந்தரத்தில் தொங்கியது. டிரைவர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கூடலூர்,

தேனி மாவட்டம், கூடலூரின் 21-வது வார்டு பகுதியாக லோயர்கேம்ப் உள்ளது. இங்கிருந்து குமுளி செல்வதற்கு 6 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான ஜீப்கள் சென்று வருகின்றன.

இதுதவிர சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் இந்த மலைப்பாதை வழியாக திரும்பி வருகின்றன. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் பாதைகள் குறுகலாகவும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் ரோடு பள்ளமாக இருப்பதால் ஆங்காங்கே தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை இடுக்கி மாவட்டம் ஆலப்புழா பகுதியில் இருந்து தேனிக்கு ஒரு லாரி பாசிப்பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த லாரியை நாமக்கல் பகுதியை சேர்ந்த ராதாகிரு‌‌ஷ்ணன் (வயது 51) என்பவர் ஓட்டி வந்தார். லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மாதா கோவில் அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்த போது திடீரென அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகே இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ இருந்தது.அப்போது அந்த லாரி தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதில் டிரைவர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த லாரி பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதையடுத்து வேறு ஒரு லாரியை வரவழைத்து அந்த லாரியில் பாசிப்பருப்பு மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story