பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்


பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 7:07 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 116 கிராம ஊராட்சி தலைவர்கள், ஊராட்சிகளில் உள்ள 819 வார்டு உறுப்பினர்கள், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 76 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் என ஊரக பகுதிகளில் காலியாக உள்ள மொத்தம் 1,019 பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதி 293 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 355 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 1,019 பதவியிடங்களுக்கு 3,121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

648 வாக்குச்சாவடி மையங்கள்

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 648 வாக்குச்சாவடி மையங்களையும் தயார்படுத்தும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சாய்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு மையங்களில் மின் வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு மையங்களில் சக்கர நாற்காலி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திட ஏதுவாக மொத்தம் 5,260 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று 648 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலீப், பேனா, பென்சில், வாக்குச்சீட்டு போடும் பெட்டியை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

4 வாக்கு எண்ணும் மையங்கள்

உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் வருகிற 27-ந் தேதி 122 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி காலை 8 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதேபோல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 ஊராட்சிகளில் வருகிற 27-ந் தேதி 171 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 ஊராட்சிகளில் வருகிற 30-ந்தேதி அன்று 355 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத் தும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உடும்பியம் ஈடர்ன் கார்டன்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

இதனால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரி, உடும்பியம் ஈடர்ன் கார்டன்ஸ் மெட்ரிக் பள்ளி, பாடாலூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு சீட்டுகள் பிரிக்கும் அறைகள், வாக்கு சீட்டினை எண்ணும் அறைகள் தயாராகி வருகிறது. மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறைகளில் பெயிண்டால் கோடு வரையப்பட்டு, எண்கள் எழுதப்பட்டு வருகிறது. மேலும், அங்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைக்கப்பட்டு, அதில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் 5 அறைகளில் பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தேவையான மேஜைகள், பாதுகாப்பு வலைகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Next Story