ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேர் கைது சரக்கு வேன் பறிமுதல்


ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேர் கைது சரக்கு வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 7:19 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமனால் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 35). இவர் பன்றிகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது பன்றிகள் அடிக்கடி திருடுபோனது. இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் 3 பேர் சேர்ந்து பன்றிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

3 பேர் கைது

இதனை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் பன்றிகளை திருடி செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவாரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா(35), கும்பகோணத்தை சேர்ந்த நாகே‌‌ஷ் மகன் தர்மா(25), கும்பகோணத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story